குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சியில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-07 22:45 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி நகராட்சி 2-வது வார்டு வ.உ.சி.நகரில் 700-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் பொதுக்குழாய் மூலம் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால் ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு கடந்த 2 மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 10.30 மணிக்கு கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், ராஜாநகர், காந்திரோடு, கடைவீதி, சேலம் மெயின்ரோடு, சிவன் கோவில் தெரு, கரியப்பாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் எங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் நகராட்சி சார்பில் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் எங்கள் பகுதியில் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் பாரபட்சம் பார்க்காமல் எங்கள் பகுதிக்கும் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதற்கு போலீசார், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்