மாமல்லபுரம் அருகே கடல் அரிப்பு; ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட படகுகள் தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை

மாமல்லபுரம் அருகே கடல் அரிப்பு ஏற்பட்டது. 2 படகுகள் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டன. தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2019-09-07 23:15 GMT
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கொக்கிலமேடு மீனவர் பகுதியில் 200 மீனவ குடும்பத்தை சேர்ந்த 300 மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த மீனவர் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று கரைப்பகுதி வரை 60 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் முன்னோக்கி சென்றதால் கடல் அரிப்பு ஏற்பட்டு மணல் திட்டு உருவானது.

இதனால் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த படகுகள் தொங்கியபடி இருந்தது. மேலும் கொக்கிலமேடு மீனவர் பகுதி கடற்கரையில் வடக்கு பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 படகுகள் ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து 10 மீனவர்கள் மற்றொரு படகில் கடலில் சென்று அந்த 2 படகுகளையும் கயிறு கட்டி மீட்டு கரை பகுதிக்கு கொண்டு வந்து பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்தனர்.

கடல் மெல்ல, மெல்ல முன்னோக்கி வருவதால் எதிர்காலத்தில் குடியிருப்புகளிலும் கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கடல் அரிப்பு காரணமாக கொக்கிலமேடு பகுதி மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடல் அரிப்பால் தங்களால் நிம்மதியாக மீன்பிடி தொழில் செய்ய முடியவில்லை. கடல் அரிப்பு ஏற்படாத வகையில் கொக்கிலமேடு கடற்கரையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்.

எதிர்காலத்தில் குடியிருப்புகளில் கடல் நீர் உட்புகும் ஆபத்து உள்ளதால் மேற்கு பகுதியில் உள்ள அரசு காலி இடத்தில் தாங்கள் குடியிருப்புகள் கட்ட மாற்று இடம் அரசு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்