கர்நாடகத்தில் புதிய சூரியசக்தி மின்சார உற்பத்தி கொள்கை ; மந்திரிசபை ஒப்புதல்

கர்நாடகத்தில் புதிய சூரியசக்தி மின்சார உற்பத்தி கொள்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

Update: 2019-09-07 00:10 GMT
பெங்களூரு, 

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாய விளைபொருட்களின் விலை குறையும்போது, அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்ய குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவை முதல்-மந்திரி எடியூரப்பா அமைப்பார். கர்நாடகத்தில் புதிய சூரியசக்தி மின்சார உற்பத்தி கொள்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. சூரியசக்தி பூங்காவில் 25 மெகாவாட் மின்சாரம் கண்டிப்பாக உற்பத்தி செய்ய வேண்டும். இது முன்பு 100 மெகாவாட்டாக இருந்தது.

சூரியசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்பவர்கள், அரசு அல்லது தனியாருக்கு விற்பனை செய்து கொள்ளலாம். போலீசாரின் சம்பள உயர்வுக்கான அவுராத்கர் அறிக்கைக்கு நிர்வாக ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்த விதிமுறைகள் வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காவேரி நீர்ப்பாசன கழகம் ரூ.250 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாங்கள் நேரில் சென்று ஆய்வு செய்தோம். நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில் பணியை ராஜினாமா செய்தது குறித்து நான் எந்த கருத்தையும் கூற முடியாது. இதுபற்றி முதல்-மந்திரி கருத்து தெரிவிப்பார். கர்நாடகத்தில் 36 ஆயிரம் ஏரிகள் உள்ளன. தேவையான நிதி ஒதுக்கீடு கிடைத்தால், ஏரிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சிறிய அளவில் தடுப்பணைகள் கட்டுவது குறித்து ஆலோசித்து உள்ளோம்.

இவ்வாறு மாதுசாமி கூறினார். 

மேலும் செய்திகள்