அரசியலமைப்பு சட்டம் என்பது எங்களுக்கு கீதை, பைபிள், குரான் போன்றது; முதல்-மந்திரி பட்னாவிஸ் கூறுகிறார்
அரசியலமைப்பு சட்டம் என்பது எங்களுக்கு கீதை, பைபிள், குரான் போன்றது என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.;
மும்பை,
மராட்டியத்தில் ஆளும் பா.ஜனதா- சிவசேனா கூட்டணியில் மத்திய மந்திரியான ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியும் அங்கம் வகிக்கிறது.
இந்த நிலையில் நேற்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-
ராம்தாஸ் அத்வாலே மராட்டியத்தின் முக்கிய தலித் தலைவர். வரவிருக்கும் தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறுவது மற்றும் இந்திய குடியரசு கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
அரசியலமைப்பு சட்டத்தை மாற்றவும், வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு முறையை முடிவுக்கு கொண்டுவரவும் பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டில் துளியளவும் உண்மை இல்லை. அரசியலமைப்பு சட்டம் என்பது எங்களுக்கு பகவத் கீதை, பைபிள் மற்றும் குரான் போன்றது ஆகும். ராம்தாஸ் அத்வாலே போன்ற தலைவர்கள் எங்களுடன் இருக்கும்போது, அரசியலமைப்பை மாற்றுவது குறித்து யாரும் யோசிக்க கூட முடியாது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பின் 370-வது பிரிவை சட்டமேதை அம்பேத்கர் எதிர்த்தார். இந்த பிரிவை நீக்கியதன் மூலம், அம்பேத்கரின் நிலைப்பாட்டிற்கு நீதி வழங்கப்பட்டுள்ளது.
இந்துமில் வளாகத்தில் அம்பேத்கருக்கு நினைவிடம் அமைக்கும் பணி 2020-ம் ஆண்டு நிறைவடையும்.
காங்கிரஸ் ஆட்சியின்போது சமூக நீதித்துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப் பட்ட நிதி நீர்பாசனம் உள்ளிட்ட பிற துறைகளுக்கு திருப்பி விடப்பட்டது. ஆனால் எங்கள் ஆட்சியில் சமூக நீதித்துறைக்கான நிதியை வேறு துறைக்கு பயன்படுத்தக்கூடாது என்பதற்காக சட்டத்தை உருவாக்கி உள்ளோம். அதன்படி நிதி முழுமையாக செலவிடப்படாவிட்டால், அது அடுத்த ஆண்டு பயன்படுத்தப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.