மும்பை காங்கிரஸ் தலைவராக ஏக்நாத் கெய்க்வாட் நியமனம்
மும்பை காங்கிரஸ் தலைவராக ஏக்நாத் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோராவும் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்தநிலையில் மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகிப் தோரட் நியமிக்கப்பட்டார். மும்பை தலைவர் நியமனத்தில் இழுபறி நிலவி வந்தது. பின்னர் மும்பை காங்கிரஸ் செயல் தலைவராக முன்னாள் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி மும்பையில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஏக்நாத் கெய்க்வாட் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில், அவரை மும்பை காங்கிரஸ் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளார்.
இதேபோல மராட்டிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக பிரகாஷ் முக்தியாவும், மாநில செயலாளர்களாக நாராயண் அம்பேகர் மற்றும் ராகுல் டைவ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
மும்பை காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஏக்நாத் கெய்க்வாட்டுக்கு வயது 79. இவர் தாராவி தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் மந்திரியான வர்ஷா கெய்க்வாட்டின் தந்தை ஆவார். மும்பையில் இருந்து 2 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
கடந்த 2014 மற்றும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்மத்திய மும்பை தொகுதியில் போட்டியிட்டு சிவசேனாவின் ராகுல் செவாலேயிடம் தோல்வியை தழுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.