டி.ஜி.பி. அலுவலகம் முன்பு ஆம்ஆத்மி நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

புதுவையில் வாட்ஸ்-அப் மூலம் மிரட்டுவதாக கூறி போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

Update: 2019-09-06 22:47 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். ஆம் ஆத்மி கட்சியின் தொழிற்சங்க தலைவர். இவர் நேற்று காலை 10 மணியளவில் கடற்கரை சாலை அருகே உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே வந்தார். அவர் திடீரென தான் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்த உடன் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர் கையில் இருந்த கேனை பிடுங்கினர். பின்னர் அங்கு இருந்த பிளாஸ்டிக் வாளியில் தண்ணீரை எடுத்து அவரது மீது ஊற்றினர்.

இது குறித்து பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிமாறனை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் ‘புதுவையில் ஒரு குழுவினர் தனது செல்போன் எண்ணை ஹேக் செய்து அதில் இருந்து தகவல்களை திருடியுள்ளனர். மேலும் நான் எனது குடும்பத்தினருடன் பேசிய உரையாடல்களை திருடி அதனை வாட்ஸ்-அப்பில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.5 லட்சம் கேட்கின்றனர். எனவே இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இதனை தொடர்ந்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி, சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்