தமிழகத்தில் கருத்துரிமை நசுக்கப்பட்டால் மு.க.ஸ்டாலின் தினமும் 3 அறிக்கைகள் எப்படி வெளியிட முடியும்? அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி

கோவில்பட்டியில் நேற்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2019-09-06 22:15 GMT
கோவில்பட்டி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டபோது, மாவட்ட நிர்வாகத்திடம் சமூக பொறுப்பு நிதியாக (சி.எஸ்.ஆர்.) குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செலுத்தி இருந்தனர். அந்த நிதியில் இருந்துதான், ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் உள்ள பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு அந்த ஆலை நிர்வாகத்திடம் இருந்து எந்த நிதியும் பெறவில்லை, எந்த மேம்பாட்டு பணிகளும் நடைபெறவில்லை.

ஸ்டெர்லைட் ஆலை குறித்து சமூக விரோதிகள் தேவையற்ற வதந்தியை பரப்பியதால்தான் தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழந்தனர். இனியும் சமூக விரோதிகள் அதுபோன்ற வதந்தியை பரப்பாமல் இருப்பதுதான் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு செய்யும் நன்மையாக இருக்கும். ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழ்நிலையிலும் திறக்கப்படாது. இதுகுறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, அது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பு அளித்து விட்டது. இதைத்தான் மக்களிடம் ஊடகங்கள் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.

தமிழகத்தில் கருத்துரிமை நசுக்கப்பட்டால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் 3 அறிக்கைகளை எப்படி வெளியிட முடியும்? அவர், தமிழக அரசின் மீது பல குறைகளை மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் கூறினாலும், அவற்றில் ஒன்றைக்கூட அவரால் நிரூபிக்க முடியவில்லை. எனவே அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கினால் அவரது எதிர்காலத்துக்கு நல்லது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க.வுக்கு 49 சதவீதமும், அ.தி.மு.க.வுக்கு 48 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன. அங்கு நூலிழையில்தான் தி.மு.க. வென்றது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 45 நாட்களில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. எனவே நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலிலும், வருகிற உள்ளாட்சி தேர்தலிலும், 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

மேலும் செய்திகள்