ஆசிரியர்கள் பணி இடமாற்றம்: மதுரை ஐகோர்ட்டு தடைவிதித்து உத்தரவு

பல்வேறு ஆசிரியர்களை பணி இடமாற்றம் செய்ததற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.

Update: 2019-09-06 22:15 GMT
மதுரை,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த கலாராணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2004-ம் ஆண்டு தொப்பம்பட்டி யூனியனுக்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். இந்தநிலையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில், அரசு பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை பயன்படுத்தி நிலக்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட பள்ளிக்கு என்னை இடமாற்றம் செய்யாமல், வேறொரு யூனியனில் உள்ள பள்ளிக்கு இடமாறுதல் செய்துள்ளனர். தற்போது நான் பணிபுரியும் யூனியனில் உள்ள அரசுப்பள்ளியில் காலிப்பணியிடம் இல்லையென்றால் தான் வேறு யூனியனுக்கு மாற்ற வேண்டும். ஆனால் நிலக்கோட்டை யூனியனில் உள்ள பல்வேறு பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் இருந்தபோதும், என்னை அந்த பள்ளிகளில் இடமாற்றம் செய்யவில்லை. மேலும் இந்த விஷயத்தில் எந்தவித அடிப்படை விதிகளையும் பின்பற்றவில்லை. எனவே நிலக்கோட்டை யூனியனில் இருந்து வேறு யூனியனுக்கு இடமாற்றம் செய்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இதேபோன்று நிலக்கோட்டை தாலுகாவை சேர்ந்த ரீத்தல், கவுரி உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் ஆசிரியர்கள் பலரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி வி.எம்.வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “பணியிட மாற்றம் செய்யப்பட்ட மனுதாரர்கள் ஏற்கனவே இருந்த இடத்தில் தான் பணியில் உள்ளனர். அவர்களை வற்புறுத்தவில்லை” என்றார்.

முடிவில், மனுதாரர்களை இடமாற்றம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்