ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது சட்டத்திற்குட்பட்டது - துரைமுருகன் எம்.எல்.ஏ. பேட்டி

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது சட்டத்திற்குட்பட்டது என்று துரைமுருகன் எம்.எல்.ஏ.,தெரிவித்தார்.

Update: 2019-09-06 22:45 GMT
காட்பாடி, 

வேலூர் மாவட்டம் காட்பாடி, தாராபடவேடு பகுதியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய ரேஷன்கடையையும், பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தையும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் எம்.எல்.ஏ. நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஜெகத்ரட்சகன் எம்.பி., கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மண்டல குழு முன்னாள் தலைவர் சுனில்குமார், தி.மு.க.பகுதி செயலாளர் வன்னியராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் துரைமுருகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தொழில் தொடங்க நிதியை திரட்டுவதற்காக தற்போது சென்றிருக்கிறார்கள். ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ரூ.2 லட்சம் கோடி ரூ.3 லட்சம் கோடி தொழில் முதலீடு கிடைத்தது என்று கூறினார்கள். தற்போதும் அதை தான் கூறுகிறார்கள். எனவே யார்?, யார்? எந்தெந்த கம்பெனிகள் முதலீடு செய்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளை தொடங்க அரசிடம் அனுமதி பெறும் போது, தொழிற்சாலையினர் முதலாம் ஆண்டில் 7 ஆயிரம் பேருக்கும், 2-ம் ஆண்டில் 10 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றுவதில்லை.

தற்போது தொழில் முதலீட்டை திரட்ட சென்றவர் திரும்பி வந்தால் தான் இதுகுறித்து தெரியவரும். ஏற்கனவே தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகம் மூடும் நிலைக்கு வந்துவிட்டது. நிலக்கரியை கையாள விதிக்கப்பட்ட தடையை விலக்க இந்த அரசு முயற்சிக்கவில்லை. இதனை பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒரு துறைமுகத்தை அமைத்து அதன் மூலம் தற்போது நிலக்கரி இறக்குமதி செய்கிறார்கள். இன்றைக்கு சென்னை துறைமுகத்தை மூடுவதற்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக அமைகிறது. மதுரவாயல் பாலம் அமைக்கப்பட்டிருந்தால் போக்குவரத்து நெரிசல் இருந்திருக்காது. அதனை இவர்கள் விட்டுவிட்டார்கள்.

தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் நடக்கிறது என்று கூறுகிறார்கள். ஏற்கனவே முதலில் 300 ஏரியை தூர்வாரினோம் என்றார்கள். பிறகு 500 ஏரியை தூர்வாரினோம் என்றார்கள். தற்போதும் தூர்வாருகிறோம் என்கிறார்கள். சட்டமன்றத்திலேயே எந்தெந்த ஏரிகள் தூர்வாரப்படுகிறது என்று பட்டியல் கேட்டால் தரவில்லை. என் தொகுதியிலாவது எந்த ஏரி தூர்வாருகிறார்கள் என பட்டியல் கேட்டால் அதையும் தரவில்லை. தற்போது தூர்வாருகிறோம் என்று கூறுகிறார்கள். மழையும் வந்துவிட்டது. இதுவரையில் ரூ.2 ஆயிரம் கோடி தூர்வார ஒதுக்கப்பட்டது மண்ணோடு, மண்ணானது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளை திறக்க அனுமதியில்லை. அங்கீகாரமில்லை என்று கூறுவது இந்த அரசின் புரட்சியாகும்.

காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது சட்டத்திற்குட்பட்டது. நீதிக்குட்பட்டது. அதை பற்றி எதுவும் அதிகம் கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்