தட்சிணகன்னடா மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில் ராஜினாமா
தட்சிணகன்னடா மாவட்ட கலெக்டராக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் நேற்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பில் சமரசம் செய்துகொண்டு பணியில் தொடருவது நியாயமற்றது என அவர் கருத்து தெரிவித்து உள்ளார்.
மங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்ட கலெக்டராக இருந்தவர் சசிகாந்த் செந்தில் (வயது 40). இவர் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந்தேதி தட்சிணகன்னடா கலெக்டராக பொறுப்பு ஏற்றார். இவர் கலெக்டராக பதவி ஏற்ற நாளில் இருந்து பொதுமக்கள் பிரச்சினைகளை, குறைகளை தீர்ப்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இதனால் அவர் மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்று திகழ்ந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் அரசுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஐ.ஏ.எஸ். அதிகாரியாகிய நான் ராஜினாமா செய்கிறேன். இந்த நேரத்தில் நான் ஒரு விஷயத்தை தெளிவாக தெரிவிக்க வேண்டியது கடமை. இது முற்றிலுமாக எனது சொந்த முடிவு மட்டும் தான். எனது ராஜினாமா முடிவுக்கு எந்த ஒரு தனிநபரோ அல்லது எந்த ஒரு நிகழ்வோ காரணமல்ல. மாவட்டத்தின் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என்னிடம் மிகுந்த அன்போடு பழகி வந்தனர். நடுவழியில் நான் எனது பதவியை ராஜினாமா செய்ததற்காக, மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நமது ஜனநாயகம் என்பது பன்முகத் தன்மை கொண்டது. ஆனால் அந்த கட்டமைப்பின், அடிப்படை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமரசங்கள் செய்யப்படும் இந்த கால சூழ்நிலையில், நான் பொதுப் பணியில் தொடர விரும்பவில்லை. மேலும் அவ்வாறு பணியில் தொடருவது தார்மீக ரீதியாக நியாயமற்றது. வருங்காலங்களில் நமது நாட்டின் அடிப்படை தன்மைக்கு இன்னும் சிரமமான காலகட்டங்கள் வரக்கூடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே ஐ.ஏ.எஸ். பணியில் இருந்து நான் விலகி இருப்பது நல்லது என்று கருதுகிறேன். இனிமேலும் இந்த பணி வழக்கமான பணியாக இருக்காது, என்பதை உணர்கிறேன். என்னிடம் நட்பு பாராட்டி நல்ல வகையில் பழகிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்துள்ள சசிகாந்த் செந்தில் சென்னையை சேர்ந்தவர். இவர் 2009-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். குழுவை சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மண்டல என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். 2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை பல்லாரி கலெக்டராகவும், சிவமொக்கா மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக 2 முறையும் பணியாற்றி உள்ளார்.
மேலும் சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்ட கலெக்டராகவும் அவர் பணியாற்றியுள்ளார். இதுதவிர 2016-ம் ஆண்டு கர்நாடக சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குனராகவும் பதவி வகித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த மாதம் (ஆகஸ்டு) மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை கண்டித்து டாட்ரா - நாகர் ஹாவேலியில் மின்சாரம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் வேளாண்மை துறை செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஷா பைசல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர், காஷ்மீர் மக்களுக்கு எதிரான தொடர் கொலை மற்றும் இந்திய முஸ்லிம்கள் ஒதுக்கப்படுவதை கண்டித்தும் தனது பதவியில் இருந்து விலகினார்.
அதுபோல் பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி கே.அண்ணாமலை கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே கலெக்டராக இருந்த சசிகாந்த் செந்தில் தனது பதவியை ராஜினாமா செய்ததற்கு மணல் கொள்ளையர்களும், பா.ஜனதாவினரும் தான் காரணம் எனக் கூறி மங்களூருவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஐவான் டிசோசா தலைமையில் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து காங்கிரசின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு முன்னாள் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தட்சிணகன்னடா மாவட்ட கலெக்டர் இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தின் மீதான மதிப்பு குறைந்து வருகிறது. இது மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது.
ராஜினாமா செய்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தார். ராஜினாமாவுக்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரியும். மத்திய அரசு வருமானவரித் துறை, தேசிய புலனாய்வு துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை சுதந்திரமாக செயல்படவிடாமல், பழிவாங்கும் அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பா.ஜனதாவை சேர்ந்த மூத்த தலைவரும், மந்திரியுமான ஈசுவரப்பா கூறுகையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது ராஜினாமாவுக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதில் குழப்பமான தகவல்களை கூறியுள்ளார். தனது ராஜினாமாவுக்கு சரியான காரணத்தை அவர் கூறவில்லை. எனவே அவர் தனது ராஜினாமா குறித்து தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். ராஜினாமா குறித்து அவர் கூறியுள்ள குழப்பமான கருத்தால் கர்நாடக மக்கள் குழப்பத்தில் உள்ளனர் என்றார்.