திருப்பூரில் இறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு; ஒரு கடையின் பதிவு சான்று ரத்து

திருப்பூரில் இறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து ஒரு கடையின் பதிவு சான்றை ரத்து செய்தனர்.

Update: 2019-09-06 23:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, சந்திராகாலனி, காங்கேயம் ரோடு, சி.டி.சி. கார்னர், எம்.எஸ்.நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனை செய்யும் 14 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகளின் படி உரிமம் பெறாத 3 கடை களுக்கு அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் இறைச்சி கடை நடத்திய 3 பேருக்கு முன்னேற்ற அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டன.

ஒரு கோழி இறைச்சி கடைக்கு வழங்கப்பட்ட பதிவு சான்று ரத்து செய்யப்பட்டது. மேலும் அந்த கடையில் இருந்த 1½ கிலோ கோழி இறைச்சி, 7 கிலோ பிஸ்கெட், தின்பண்டங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

மீன், கோழி மற்றும் ஆட்டிறைச்சி கடை நடத்துபவர்கள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு சான்று பெறுவது அவசியம். கடையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெட்டப்பட்ட இறைச்சி கழிவுகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். கடையில் வேலை செய்பவர்கள் தன் சுத்தம் பேண வேண்டும் என்று உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி அறிவுறுத்தினார். காங்கேயம் ரோட்டில் உள்ள பிரியாணி கடைகளிலும், பேக்கரிகளிலும் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்