தொடர் மழையால், ஊட்டி அணைகளில் நீர்மட்டம் கிடு, கிடு உயர்வு

தொடர் மழையால் ஊட்டி அணைகளில் நீர்மட்டம் கிடு, கிடு என உயர்ந்து உள்ளது.

Update: 2019-09-06 22:15 GMT
ஊட்டி,

ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுமார் 25 ஆயிரம் வீடுகளில் வசித்து வருகிறார்கள். சுற்றுலா நகரமான ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவர்கள் தங்குவதங்காக ஊட்டியில் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன.

மலைகளின் அரசியான ஊட்டியின் குடிநீர் தேவையை பல்வேறு அணைகள் பூர்த்தி செய்து வருகிறது. குறிப்பாக பார்சன்ஸ்வேலி அணை, டைகர்ஹில் அணை, மார்லிமந்து அணை, தொட்டபெட்டா அப்பர் அணை, கோடப்பமந்து அப்பர் அணை ஆகியவை முக்கிய அணைகளாக உள்ளது.

ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்தது. ஆனால், நடப்பாண்டில் கோடை காலத்தில் பெய்ய வேண்டிய மழை குறைவாக பெய்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.

ஊட்டி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பார்சன்ஸ்வேலி அணையில் கடந்த மார்ச் மாதம் 23 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதற்கிடையே நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் தீவிரமாக இடைவிடாமல் பெய்தது. இதனால் வனப்பகுதிகளில் இருந்து பல்வேறு இடங்களில் உற்பத்தியாகும் தண்ணீர் அணைகளில் சேகரமானது. அதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து மின்சார உற்பத்திக்காக எமரால்டு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தற்போது கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடு என உயர்ந்த வண்ணம் உள்ளது. பார்சன்ஸ்வேலி அணையில் 39.7 அடியாக நீர்மட்டம் அதிகரித்து இருக்கிறது. டைகர்ஹில் அணையில் 22.5 அடிக்கும், தொட்டபெட்டா அப்பர் அணையில் 24 அடிக்கும், மார்லிமந்து அணையில் 13 அடிக்கும் நீர்மட்டம் காணப்படுகிறது.

ஊட்டியில் உள்ள அணைகளில் நீர் இருப்பு அதிகமாக உள்ளதால், பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மழை அதிகமாக பெய்ததால் கடந்த பல நாட்களாக மண் கலந்த நீர் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்து உள்ளனர். கலங்கல் குடிநீராக வருவதால் பொதுமக்கள் பல முறை வடிகட்டி குடிப்பதற்கு மற்றும் சமையலுக்கு பயன் படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, ஊட்டி நகராட்சியில் குடிநீரில் குளோரின் கலந்து சுத்தமாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்