அரசம்பட்டு கூட்ரோட்டில் பஸ்கள் நிற்காமல் செல்வதை கண்டித்து: கல்லூரி மாணவர்கள் ‘திடீர்’ சாலை மறியல்

பஸ்கள் நிற்காமல் செல்வதை கண்டித்து கல்லூரி மாணவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-09-06 22:15 GMT
சேத்துப்பட்டு, 

வந்தவாசி அருகே உள்ள தென்னாங்கூர் அரசு கலைக்கல்லூரியில் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் அரசம்பட்டு கூட்ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் அரசு பஸ்சில் கல்லூரிக்கு சென்று திரும்புகின்றனர். ஆனால் பஸ்கள் கடந்த சில வாரங்களாக அரசம்பட்டு கூட்ரோட்டில் நிற்காமல் கோழிப்புலியூர் கூட்ரோட்டில் நிறுத்தப்படுகிறது. அரசம்பட்டுக்கும், கோழிப்புலியூருக்கும் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்கள் கோழிப்புலியூர் கூட்ரோடு அருகே நேற்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசம்பட்டு கூட்ரோட்டில் பஸ்களை நிறுத்த வேண்டும் என்று மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் சுமார் ½ மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு போதுமான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்யப்படவில்லை. பலருக்கு பஸ் பாஸ் கிடைக்கவில்லை.

இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசாரும், கல்லூரி நிர்வாகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்