திருவெண்ணெய்நல்லூர் அருகே, 4 கூரை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல் - ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே 4 கூரை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அண்ட்ராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆலப்பன் மகன் முருகன் (வயது 45). இவருடைய கூரை வீட்டில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையறிந்ததும் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் பலத்த காற்று வீசியதால் தீயை அணைக்க முடியவில்லை.மளமளவென பரவிய தீ அருகில் இருந்த கலியன் மகன் முருகன், சக்திவேல், அர்ச்சுனன் ஆகியோரின் கூரை வீடுகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.
இதுகுறித்து உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 4 வீடுகளும் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலானது.
இதில் வீடுகளில் இருந்த டி.வி., கட்டில், பீரோ, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களும், துணிமணிகளும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதன் சேத மதிப்பு ரூ.5 லட்சமாகும். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.