வேளாங்கண்ணி திருவிழாவுக்கு செல்வதற்காக தஞ்சை பஸ், ரெயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

வேளாங்கண்ணி திருவிழாவுக்கு செல்வதற்காக தஞ்சை பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியபடி காணப்பட்டது.

Update: 2019-09-06 23:00 GMT
தஞ்சாவூர்,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி இன்று(சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. 

திருவிழா நாட்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், மராட்டி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலியும் நடைபெற்று வருகிறது. வேளாங்கண்ணி திருவிழா கொடியேற்றம் தொடங்குவதற்கு முன்பாக இருந்து தேர்பவனி வரை பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பஸ், ரெயில்களிலும் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் நடந்து செல்லும் பக்தர்கள் சிறிய சப்பரங்களையும் இழுத்துச் சென்றனர். இந்த நிலையில் இன்று தேர்பவனி நடைபெறுவதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் நேற்று முதலே வேளாங்கண்ணிக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் தஞ்சை ரெயில் நிலையத்தில் நேற்று வேளாங்கண்ணி செல்லும் ரெயிலுக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியபடி காணப்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக ரெயில்களில் இடம் இல்லாததால் பக்தர்கள் நின்றபடி பயணம் செய்தனர். இதேபோல் தஞ்சை புதிய பஸ் நிலையத்திலும் வேளாங்கண்ணி செல்வதற்காக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

இந்த திருவிழாவுக்காக  தஞ்சையில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதேபோல் சிறப்பு ரெயிலும் தஞ்சை வழியாக இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்