ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் மூலம், 9 லட்சம் அரசு பணியாளர்கள் பயன்பெறுவார்கள்

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் மூலம் 9 லட்சம் அரசு பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-06 22:00 GMT
நாகப்பட்டினம், 

நாகை கலெக்டர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்டரங்கில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட செயலாக்கத்தின் ஆய்வு கூட்டம்  நடைபெற்றது. 

கூட்டத்திற்கு முதன்னை செயலாளரும், கருவூல கணக்குத்துறை ஆணையருமான தென்காசி ஜவஹர் தலைமை தாங்கினார்.  கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் முதன்மை  செயலாளர் தென்காசி ஜவஹர் பேசும் போது கூறியதாவது:-
 
தமிழக அரசு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்திட தீவிர  நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 
இந்தியாவிலேயே முதன் முறையாக மாநிலத்தின் நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைத்து அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசின் நிதி நிர்வாகம் மற்றும் வரவு, செலவு குறித்த விவரங்களை நிகழ் நேரத்தில் அறிந்து கொள்ள முடியும். 

இந்த திட்டத்தின் மூலம் 9 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் 8 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவார்கள். மாநில கணக்காயர் அலுவலகம், வருமான வரித்துறை,  இந்திய ரிசர்வ் வங்கி, முகமை வங்கிகள் மற்றும் அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வன  உயிரின காப்பாளர் கலாநிதி, இணை இயக்குனர் (மின் ஆளுகை) ஆதவன், மண்டல இணை இயக்குனர் பழனிச்சாமி, மாவட்ட கருவூல அலுவலர் முருகவேல் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்