பிரதமர் மோடி இன்று பெங்களூரு வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-2 விண்கலம் தரை இறங்குவதை இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் அமர்ந்து பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று(வெள்ளிக்கிழமை) பெங்களூரு வருகிறார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Update: 2019-09-05 23:45 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் நிலவு பற்றி ஆராய்ச்சி செய்ய சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. அந்த விண்கலம் 47 நாட்கள் விண்வெளியில் பயணம் செய்து நாளை(சனிக்கிழமை) அதிகாலை 1.30 மணியில் இருந்து 2.30 மணிக்குள் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்குகிறது. இந்த அரிய நிகழ்வை, பெங்களூரு இஸ்ரோ மையத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நம் நாடு மட்டுமின்றி உலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த நிகழ்வை பெங்களூரு பீனியாவில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகளுடன் அமர்ந்து பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இதற்காக பிரதமர் மோடி இன்று(வெள்ளிக்கிழமை) இரவு பெங்களூரு வருகிறார்.

கவர்னர் மாளிகையில் தங்கும் அவர், நாளை அதிகாலை இஸ்ரோ மையத்திற்கு வருகிறார். அவருடன் கவர்னர் வஜூபாய் வாலா, முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்டோரும் வரவுள்ளனர். அங்கு பிரதமருடன் அமர்ந்து 70 மாணவர்களும் நிலவில் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்குவதை பார்வையிட உள்ளனர்.

பிரதமர் வருகையை முன்னிட்டு பெங்களூருவில் குறிப்பாக பீனியாவில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அந்த மையம் தற்போது போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, நாளை காலை தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டு செல்கிறார். 

மேலும் செய்திகள்