மும்பையில் கொட்டி தீர்த்த கனமழைக்கு மாநகராட்சி ஊழியர்கள் உள்பட 4 பேர் பலி

மும்பையில் கொட்டி தீர்த்த கனமழைக்கு மாநகராட்சி ஊழியர்கள் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-06 00:00 GMT
மும்பை, 

மும்பையில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நகரில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று முன்தினம் பேய்மழை கொட்டி தீர்த்தது. இதனால் மும்பை பெருநகரம் வெள்ளக்காடாக மாறியது.

தண்டவாளங்கள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் நகரில் ரெயில், பஸ் போக்குவரத்து அடியோடு முடங்கியது. நடுவழியில் பயணிகள் பரிதவித்தனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பலத்த மழையின்போது கோரேகாவ் சித்தார்த் நகர் பகுதியில் சாலையில் தேங்கிய வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த மாநகராட்சி ஊழியர்கள் விஜயேந்திரா சர்தார் பாக்டி(36), ஜக்தீஷ் பர்மார்(54) ஆகிய இரண்டு பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று அதிகாலை பரேல் இந்துமாதா பகுதியில் தேங்கி நின்ற வெள்ளத்தில் அசோக் மயேகர்(வயது60) என்ற முதியவர் மூழ்கி பிணமாக கிடப்பது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பாரத் நகரில் முகமது ஷாருக் ரபிக் சேக் (24) என்ற வாலிபர் சாக்கடையில் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். மீட்பு படையினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையே மும்பைக்கு நேற்று வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கையை விடுத்து இருந்தது. ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை என்பது தீவிர மழை பொழிவு மற்றும் அந்த மழையை எதிர்கொள்ள மக்கள் தயாராகி கொள்ளவேண்டும் என்பதை குறிப்பதாகும். இது சிவப்பு எச்சரிக்கை(ரெட் அலர்ட்) என்பதற்கு முந்தைய நிலை ஆகும். இதை கருத்தில் கொண்டு குர்லா, பரேல் மற்றும் அந்தேரியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததைபோல மிரட்டும் மழை பெய்யவில்லை. மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

இந்தநிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை லேசானது முதல் மிதமான அளவுக்கு மும்பையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்