மாவட்டத்தில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2019-09-05 21:30 GMT
கரூர்,

கரூர் லைட்அவுஸ் கார்னர் நகர்மன்ற குமரன் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி தலைமை தாங்கினார். தொடர்ந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாணவ-மாணவிகள் ஆசிரியர்களை வணங்கி, அவர்களுக்கு பேனா, பென்சில், கரும்பலகையை துடைக்கும் டஸ்டர் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கினர். ஆசிரியர் தினத்தையொட்டி வகுப்பறை, பள்ளி வளாகம், நாம் வாழும் குடியிருப்பு பகுதி உள்ளிட்டவற்றை தூய்மையாக வைத்து கொள்வது குறித்து மாணவர்கள் உறுதிமொழியேற்றனர். ஆசிரியர்கள்-மாணவர்களுக்கிடையேயான பிணைப்பு, வாழ்வின் ஏணிப்படி ஆசிரியர் என்பன உள்ளிட்ட தலைப்பில் ஆசிரியர்களை வாழ்த்தி மாணவர்கள் பேசினார்கள்.

இதேபோல் கரூர் தாந்தோன்றிமலை ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் சுமதி வரவேற்று பேசினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் குறித்து பாட்டு, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், துணை ஆய்வாளர் சாந்தி ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உதவியாசிரியை தனம் நன்றி கூறினார்.

இதேபோல், கரூர் மாரியம்மன் கோவில் அருகேயுள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாந்தோன்றிமலை அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் தாந்தோன்றிமலை அரசு கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. 

மேலும் செய்திகள்