தமிழக பாரதீய ஜனதா தலைவர் பதவி நியமனத்தில் இழுபறி ஏதும் இல்லை - கோவையில் எச்.ராஜா பேட்டி

தமிழக பாரதீய ஜனதா தலைவர் பதவி நியமனத்தில் இழுபறி ஏதும் இல்லை என்று எச்.ராஜா கூறினார்.

Update: 2019-09-05 23:00 GMT
கோவை,

கோவை சாய்பாபாகாலனி எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ப.சிதம்பரம் விசாரணை கைதியாக உள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியைசேர்ந்தவர்கள் ஊழல் செய்ததாக ஒருவர்பின் ஒருவராக சிக்கி வருகிறார்கள். காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவை 9 மணி நேரத்தில் மோடி அரசு ரத்து செய்துள்ளது.

தற்போது காஷ்மீர் இந்தியாவில் பிரிக்கமுடியாத பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் மறைக்க பொருளாதாரம் குறித்து தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

உலகத்திலேயே தற்போது அதிகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளில் 3-வது இடத்தில் இந்தியா உள்ளது என்று பிரிக்ஸ் கூட்டமைப்பு கூறியுள்ளது. புதிய தொழில்நுட்பம் மாறி வருகிறது. 2018-ம் ஆண்டு நவம்பருக்கு பிறகு சிறு தொழில் முதல் பெரிய வணிகம் வரை அனைத்து தொழில்களும் வங்கி முறையில் வணிகம் செய்யப்படுகிறது.

விவசாயத்துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு முனைப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வருடமும் உபரி நிதியை மத்திய அரசுக்கு அளித்து வருகிறது. இந்த வருடம் அதன் உபரி நிதி அதிகமாக இருக்கிறது.

ஊழல்வாதிகளின் கைது நடவடிக்கை தொடரும். கூடிய சீக்கிரத்தில் நேசனல் ஹெரால்டு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு வந்த கதி சோனியா காந்தி, ராகுலுக்கு வரும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற ஊழல்களை மறைக்க பொருளாதாரம் பின் தங்கியுள்ளதாக அவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் பொருளாதாரம் பற்றி மக்கள் பீதியடைய தேவையில்லை.

ஆட்டோ மொபைலில் பிராண்டு விட்டு பிராண்டு மாறுவதால் சில பிராண்டு ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் பாதிக்கப்படுவது சாதாரணம் தான். இதை ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்தவர்களே 7 சதவித சரிவை சாதாரணம் என்றுதான் கூறுகின்றனர்.

முதல்-அமைச்சர் வெளிநாடு செல்வது ஒன்றும் புதியது இல்லை. முதல்- அமைச்சராக கருணாநிதி பதவி வகித்தபோது பேண்ட் அணிந்து தான் அமெரிக்கா சென்று இருந்தார். முதலீடுகளை பெற முதல்-அமைச்சர் வெளிநாடுகள் செல்வது இயல்புதான்.

தமிழக பாரதீய ஜனதா தலைவர் பதவிக்கான போட்டிக்கு 15 பேர் என்று ஊடகங்கள் கூறி வருகின்றன. இது எங்களுக்கு பெருமையாக உள்ளது. பாரதீய ஜனதாவில் அகில இந்திய தலைமையின் முடிவை அடிமட்ட தொண்டர்கள் கூட ஏற்றுக்கொள்வார்கள். மேலும் தலைவர் பதவி நியமனத்தில் இழுபறி ஏதும் இல்லை. காங்கிரசில் இருந்து பல பேர் பாரதீய ஜனதாவில் சேர வருகிறார்கள்.

இன்னும் 5 மாதங்களில் தமிழகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். கனிமொழி தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்ற வழக்கும் மட்டும் இல்லாமல் நீலகிரி, மத்திய சென்னை, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தவிர்க்க முடியாதது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பாரதீய ஜனதா கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், காய்கறி மொத்த மார்க்கெட் தலைவர் பழனிசாமி, இந்து முன்னணி முன்னாள் மாநில செயலாளர் பரமசிவம் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்