பழனி, வேடசந்தூர் பகுதிகளில், விநாயகர் சிலைகள் ஊர்வலம்

பழனி, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தன.

Update: 2019-09-05 22:15 GMT
வேடசந்தூர், 

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பழனி நகர், அடிவாரம், ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம், மானூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் 150 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. அந்த சிலைகள் சரக்கு ஆட்டோ, டிராக்டர் மூலம் பழனி அடிவாரம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் பாத விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக நடந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து அடிவாரம் பகுதியில் இருந்து சிலைகள் ஊர்வலமாக சன்னதிவீதி, அடிவாரம் ரோடு, பஸ்நிலைய ரவுண்டானா, திண்டுக்கல் சாலை, காந்தி மார்க்கெட் ரோடு, காரமடை வழியாக சண்முகநதிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் வேடசந்தூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. வேடசந்தூர் ஆர்.எச்.காலனி விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு மாநில செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில அமைப்புச்செயலாளர் ரவிபாலவன், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலம் வடமதுரை ரோடு, சாலைத்தெரு, கடைவீதி, பஸ் நிலையம், ஆத்துமேடு, மார்க்கெட்ரோடு வழியாக குடகனாறு சென்று சிலைகள் கரைக்கப்பட்டது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் சாணார்பட்டி ஒன்றியம் மேட்டுக்கடை, பழனிமாநகர், தோப்பூர், லெட்சுமிநாயக்கன்பட்டி, ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட 9 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று இந்த சிலைகள் அனைத்தும் சாணார்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சங்கர்கணேஷ் தலைமை தாங்கினார். கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், சாணார்பட்டி ஒன்றிய பொதுச்செயலாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதையடுத்து அங்கிருந்து ஊர்வலம் தொடங்கி சாணார்பட்டி மேட்டுக்கடை வழியாக சென்று மல்லாத்தான்பாறை சிவன் கோவில் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

தாடிக்கொம்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 23 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த சிலைகள் ஊர்வலமாக வாகனங்களில் எடுத்து சென்று குடகனாற்றில் நேற்று கரைக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் சூர்யா தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராம்குமார், ஆனந்த சுவாமிகள் கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட துணைத்தலைவர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்