நீலகிரி மலைப்பகுதியில் கனமழையால் வரத்து அதிகரிப்பு: பவானிசாகர் அணை நீர்மட்டம் 95 அடியை நெருங்கியது
நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடியை நெருங்கி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
பவானிசாகர்,
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை மண்ணால் கட்டப்பட்ட அணை என்ற பெருமையை கொண்டது ஆகும். இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. இதில் சேறும்-சகதியும் போக 105 அடியாக கணக்கிடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் சுமார் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில தினங்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 662 கன அடிநீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 93.96 அடியாக இருந்தது. நேற்று மாலை வினாடிக்கு 9 ஆயிரத்து 483 கனஅடி நீர் அதிகரித்து வந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 94.44 அடியாக உள்ளது. மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,350 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடியை நெருங்கி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.