விழுப்புரத்தில் பரபரப்பு, நடுரோட்டில் 4 மாணவிகளுக்கு தர்மஅடி

விழுப்புரத்தில் பள்ளிக்கு ‘கட்’ அடித்துவிட்டு ஊர் சுற்றிய 4 மாணவிகளை பெற்றோர்கள் நடுரோட்டில் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-05 22:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேர் நேற்று தங்களது பெற்றோர்களிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி, வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி பள்ளிக்கு செல்லாமல் அங்கிருந்து புதுச்சேரிக்கு சென்று பூங்கா, கடற்கரை என சுற்றித்திரிந்துள்ளனர்.

இதற்கிடையே அந்த 4 மாணவிகளில் ஒரு மாணவியின் தாயார், பள்ளிக்கு மதிய உணவு எடுத்துச் சென்றார். அப்போது தான் அந்த மாணவியும், அவரது 3 தோழிகளும் பள்ளிக்கு வராதது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த 4 மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விழுப்புரம் பகுதியில் அவர்களை தேடினர். ஆனால் மாணவிகள் கிடைக்கவில்லை. இதில் செய்வதறியாது திகைத்து காந்திசிலை அருகே மாணவிகளின் பெற்றோர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது மாணவிகளுக்கு பழக்கமான ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் அந்த பகுதிக்கு வந்தார். மாணவிகளின் பெற்றோரை பார்த்த அந்த வாலிபர் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டார். இதில் சந்தேகமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், 4 மாணவிகளும் பள்ளிக்கு ‘கட்’ அடித்துவிட்டு புதுச்சேரிக்கு சென்று சுற்றிப்பார்த்து விட்டு, மீண்டும் அங்கிருந்து பஸ்சில் விழுப்புரத்துக்கு வந்து கொண்டிருப்பதாக கூறினார். இதை கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள், அந்த மாணவிகள் வரும் பஸ்சுக்காக காத்து நின்றனர். சிறிது நேரத்தில் அந்த பஸ் வந்தவுடன், பஸ்சுக்குள் ஏறி தங்கள் மகள்களை வெளியே இழுத்து வந்தனர். பின்னர் பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றுகிறீர்களா? என்று கேட்டு 4 மாணவிகளையும் நடுரோட்டிலேயே அவர்களது பெற்றோர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.

பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றிய 4 மாணவிகளை நடுரோட்டில் பெற்றோர்கள் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்