உதவி பேராசிரியர் பணியிடம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

தமிழ்நாடு மீன்வள அறிவியல் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் பணியிடத்துக்கான தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில், பல்கலைக்கழக பதிவாளர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-09-05 22:30 GMT
மதுரை,

தூத்துக்குடி பொன்னாகரத்தை சேர்ந்தவர் ஜென்சி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான், மீன்வள அறிவியல் இளங்கலை பட்டமும், மீன்வள உயிரி தொழில்நுட்ப துறையில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளேன். அத்துடன் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றுவதற்கான நெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். நான், மீன்வள அறிவியல் துறை சார்ந்த கல்வி நிறுவனங்களில் மட்டுமே பணியாற்ற முடியும்.

மேலும், இந்த துறையில் பட்டம் பெற்றவர்களால் மட்டுமே மீன்வள அறிவியல் குறித்து படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடம் சொல்லித்தர முடியும். இதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தேன். இந்த நிலையில், தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி, ஜெயலலிதா மீன்வள அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது.

அதில், உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் அறிவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. இதனால், மீன்வள உயிரி தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

எனவே, மீன்வள அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடத்துக்கான அறிவிப்பை ரத்து செய்வதுடன், மீன்வள அறிவியல் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க ஏதுவாக புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி வேலுமணி, இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் பதிவாளர், தூத்துக்குடி மீன்வள மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர், தமிழக கால்நடைத்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மேலும் செய்திகள்