புதுச்சேரி துணை சபாநாயகராக பாலன் எம்.எல்.ஏ. தேர்வு; இன்று பொறுப்பேற்கிறார்

புதுவை துணை சபாநாயகராக எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். அவர் இன்று பொறுப்பேற்று கொள்கிறார்.

Update: 2019-09-05 00:15 GMT
புதுச்சேரி,

புதுவை சபாநாயகராக பதவி வகித்து வந்த வைத்திலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து துணை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்து சபாநாயகராக தேர்வு செய்யப்பட் டார். அவர் வகித்து வந்த துணை சபாநாயகர் பதவி காலியாக இருந்து வந்தது. இந்த பதவிக்கான தேர்தல் அறிவிப்பை நேற்று முன்தினம் சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டசபையில் வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயரிடம் எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சார்பில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி, சிவா, கீதா ஆனந்தன், வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக எம்.என்.ஆர்.பாலன் போட்டியின்றி தேர்வாகிறார்.

இதற்கான அறிவிப்பு புதுவை சட்டமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. தொடர்ந்து அவரை துணை சபாநாயகர் இருக்கையில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமர வைப்பார்கள். அதன்பின் தனது அலுவலகத்துக்கு வந்து எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. பொறுப்பேற்றுக்கொள்வார்.

மேலும் செய்திகள்