அடகு கடையின் சுவரை துளையிட்டு 1 கிலோ தங்கம்-வெள்ளி பொருட்கள் கொள்ளை
கொள்ளிடம் அருகே அடகு கடையின் சுவரை துளையிட்டு 1 கிலோ தங்கம் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியை சேர்ந்தவர் சிவபுரி(வயது 45). இவர், கொள்ளிடம் அருகே புத்தூர் மெயின் ரோட்டில் அடகு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சிவபுரி, அடகு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
நேற்று காலை வழக்கம்போல் இவர் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையின் பின்புற சுவரில் துளை போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் பார்த்தபோது கடையில் உள்ள லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 1 கிலோ தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் கொள்ளை நடந்த அடகு கடைக்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். நாகையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த கடையில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாக இருந்த தடயங்களை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.