வாணியம்பாடியில் தொடரும் சம்பவம் ஷூ கம்பெனி மேலாளர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை

வாணியம்பாடியில் ஷூ கம்பெனி மேலாளர் வீட்டில் 22 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Update: 2019-09-04 22:45 GMT
வாணியம்பாடி, 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு, தோல் வியாபாரி பாரூக் என்பவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பிரியாணி, மக்ருணி தயாரித்து சாப்பிட்டுவிட்டு நகையையும், மோட்டார்சைக்கிளையும் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினமும் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அதே பாணியில் டைனிங் டேபிளில் அமர்ந்து குளிர்பானத்தை குடித்ததோடு சாக்லெட்டுகளையும் ருசிபார்த்து விட்டு நகைகளை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாணியம்பாடி கோட்டை பட்டே யாகூப் தெருவை சேர்ந்தவர் தவுசீப்அஹமத் (வயது 46). இவர் ஆம்பூர் அருகே துத்திப்பட்டில் உள்ள ‘ஷூ’ கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தவுசீப்அஹமத் வேலைக்கு சென்றுவிட்டு அங்கிருந்தபடியே அலுவலக வேலையாக சென்னைக்கு சென்றார். இதனால் அவருடைய மனைவி நிம்ரா, தனது குழந்தைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு சி.எல்.ரோட்டில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் வேலைக்காக வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த அவர், தவுசீப்அஹமத்தின் தந்தை அல்தாபுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் வீட்டிற்கு வந்து பார்த்து விட்டு தனது மகனுக்கும், வாணியம்பாடி நகர போலீசாருக்கும் தகவல் அளித்தார்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த 22 பவுன் நகையும், வெள்ளி பொருட்களும் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டிற்கு கொள்ளை அடிக்க வந்த நபர்கள் பிரிட்ஜில் இருந்த குளிர்பானங்களை டைனிங் டேபிளில் அமர்ந்து குடித்ததோடு சாக்லெட்டுகளையும் சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு ரூ.6 லட்சம் வரை இருக்கலாம் என தெரிகிறது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு தோல் வியாபாரி பாரூக் வீட்டில் மக்ருணி, பிரியாணி ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டு விட்டு கொள்ளையடித்ததும், இப்போது தவுசீப்அஹமது வீட்டில் சாக்லெட்டை தின்று விட்டு கொள்ளையடித்தவர்களும் இளைஞர்களாகத்தான் இருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். வாணியம்பாடி பகுதியில் தற்போது வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் இரவு நேரங்களில் அதிகம் நடமாடுவதாக தெரிகிறது.

வாணியம்பாடி பகுதியில் தொடர் கொள்ளை நடப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே ரோந்துப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொள்ளையை தடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்