திருப்பூரில் தொழிலாளியை கத்தியால் குத்தி பணம் பறித்த 3 பேர் கைது; கீழே விழுந்ததில் கை, கால்கள் முறிந்தது

திருப்பூரில் தொழிலாளியை கத்தியால் குத்தி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் போலீசிடம் இருந்து தப்பி ஓடியபோது கீழே விழுந்ததில் கை, கால்களில் எலும்பு முறிந்து காயமடைந்தனர்.

Update: 2019-09-04 23:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளியான ராஜ்(வயது 42) நேற்று முன்தினம் அணைக்காடு ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது ரோட்டோரத்தில் நின்ற 3 பேர் அவரை வழிமறித்து கத்தியால் தோள்பட்டையில் குத்தி காயம் ஏற்படுத்தி அவரிடம் இருந்த ரூ.350, கைக்கெடிகாரம் ஆகியவற்றை பிடுங்கிக்கொண்டு தப்பினார்கள். இதுகுறித்து ராஜ் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் சஞ்சய்குமார் உத்தரவுப்படி, மாநகர துணை கமி‌‌ஷனர் உமா மேற்பார்வையில் உதவி கமி‌‌ஷனர் வெற்றிவேந்தன் அறிவுரையின் பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரபிரசாத், தங்கவேல் மற்றும் போலீசார் வழிப்பறி ஆசாமிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை பல்லாவரத்தை சேர்ந்த அசரப் அலி(வயது 28), கிலாம்பாக்கத்தை சேர்ந்த பீர் முகமது(28), செல்லியம்மன்பாக்கத்தை சேர்ந்த அருண்ராஜ்(28) ஆகிய 3 பேரை வடக்கு போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து ராஜை மிரட்டி பணம், கைக்கெடிகாரத்தை பறித்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் துரத்திச்சென்றபோது 3 பேரும் கீழே விழுந்ததில் அவர்களுக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டு காயமடைந்தனர்.

இதில் அசரப் அலி மீது கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கும், சங்கர் நகரில் அடிதடி வழக்கும் உள்ளது. பீர் முகமது மீது காஞ்சீபுரம் மாவட்டம் சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கு உள்ளது. அருண்ராஜ் மீது கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கும், ஓட்டேரி போலீஸ்நிலையத்தில் கூட்டுக்கொள்ளை வழக்கு, மைலாப்பூர் போலீஸ் நிலையத்தில் கொலைமுயற்சி வழக்கு உள்ளது.

இவர்கள் 3 பேரும் திருப்பூர் காலேஜ் ரோட்டில் கடந்த 1-ந் தேதி நடந்த பாலமுருகன் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான விக்னே‌‌ஷ்வரனின் கூட்டாளிகள் ஆவார்கள். கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பாலமுருகன் கொலை வழக்கு குற்றவாளிகள் மற்றும் வழிப்பறி குற்றவாளிகளை கைது செய்த திருப்பூர் வடக்கு போலீசாரை மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் சஞ்சய்குமார் பாராட்டினார்.

மேலும் செய்திகள்