தானே மாநகராட்சி கமிஷனர் கீழ்படிய மறுக்கிறார்: முதல்-மந்திரிக்கு, மேயர் புகார் கடிதம்

மாநகராட்சி கமிஷனர் தனக்கு கீழ்படிய மறுப்பதாக கூறி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு, தானே மேயர் மீனாக்‌ஷி ஷிண்டே கடிதம் மூலம் புகார் கூறியுள்ளார்.

Update: 2019-09-04 23:00 GMT
தானே, 

தானே மாநகராட்சி கமிஷனராக இருப்பவர் சஞ்சீவ் ஜெய்ஸ்வால். கடந்த வாரம் இவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்ததோடு, அதற்காக சிறப்புக் கூட்டத்தை நடத்துமாறு மேயருக்கு கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்தநிலையில் கமிஷனர் சஞ்சீவ் ஜெய்ஸ்வால், கடந்த சனிக்கிழமையன்று மேயருக்கு எழுதிய கடிதத்தில், தனது 4 ஆண்டு பதவிக்காலத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு, நகரத்தின் மற்றும் மக்களின் வளர்ச்சிக்காக உழைப்பதாகக் கூறியிருந்தார். மேலும் மாநகராட்சி நிர்வாகத்தின் முடிவுகளை கவுன்சிலர்கள் எதிர்ப்பதாகவும், இத்தகைய நடவடிக்கை தன்னை காயப்படுத்தியதாகவும் கூறியிருந்தார். இந்த கடிதம் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் தானே மாநகராட்சி மேயர் மீனாக்‌ஷி ஷிண்டே, கமிஷனர் சஞ்சீவ் ஜெய்ஸ்வால் தனது உத்தரவுக்கு கீழ்படிய மறுப்பதாக கூறி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதில் அவர் கூறியிருப்பதாவது:-

தானே மாநகராட்சி பொதுக்குழு கூட்டத்திற்கு சஞ்சீவ் ஜெய்ஸ்வால் அதிக முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறார். மற்ற அதிகாரிகளை இதில் கலந்துகொள்ள வேண்டாம் என வலியுறுத்துகிறார். ஆனால் குறிப்பிட்ட சில கூட்டங்களில் தனிப்பட்ட ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார். ஜனவரி 26 மற்றும் ஆகஸ்ட் 15 ஆகிய தேதிகளில் தானே மாநகராட்சி கொடி ஏற்றும் விழாக்களிலும் அவர் கலந்து கொள்ள தவறிவிட்டார். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மோசமாக நடத்துவதையும், அவர்கள் மீது குற்றம் சுமத்துவதையும் நிறுத்திக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்