அரசு நலத்திட்ட உதவிகளை சிரமமின்றி பெற திருநங்கைகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுமா?
அரசு நலத்திட்ட உதவிகளை சிரமமின்றி பெறுவதற்கு திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி,
தேனி மாவட்டத்தில், திருநங்கைகள் 350-க்கும் அதிகமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இவர்களில் பலரும் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். வேலை வாய்ப்பு, சமூக அங்கீகாரம் கிடைக்காமல் இன்னும் பலர் வாழ்க்கையை சிரமங்களுடன் எதிர்கொண்டு வருகின்றனர். சுயதொழில் தொடங்க வேண்டும் என்றால் கூட அதற்கான முதலீடு இன்றி பரிதவிக்கின்றனர். திருநங்கைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாவட்ட கலெக்டர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த கூட்டங்களில் திருநங்கைகள் தங்களின் குறைகளை தெரிவிக்கவும், அரசு நலத்திட்டங்களை பெறவும் எளிமையாக இருந்தன.
தேனி மாவட்டத்தில் சுமார் 10 ஆண்டுகளாகவே திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படவில்லை. சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை வைத்தபோதிலும், அதுபோன்ற கூட்டம் எதுவும் நடத்தப்படாத நிலைமையே நீடிக்கிறது. திருநங்கைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை சிரமமின்றியும், எளிதில் பெறவும், அவர்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கவும் இதுபோன்ற சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் பயன் உள்ளதாக இருக்கும்.
எனவே மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறையேனும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்புகளோடு திருநங்கைகள் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் திருநங்கைகளின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.