இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் கரூர் கோர்ட்டில் சமூக ஆர்வலர் முகிலன் ஆஜர்

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் கரூர் கோர்ட்டில் சமூக ஆர்வலர் முகிலன் ஆஜரானார்.

Update: 2019-09-04 23:00 GMT
கரூர்,

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் முகிலன், கற்பழிப்பு வழக்கில் கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் அருகே சீத்தப்பட்டி காலனியில் நடந்த ஒரு கூட்டத்தில், தமிழக அரசுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் முகிலன் பேசியதாக அரவக்குறிச்சி போலீசார் தொடர்ந்த வழக்கு, கரூர் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக நேற்று திருச்சி மத்திய சிறை யிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கரூருக்கு அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை விசாரித்த நீதிபதி கோபிநாத், இந்த வழக்கினை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். இதே போல், வாங்கலில் மணற்கொள்ளைக்கு எதிரான போராட்டத்தின் போது ஒருவரை தாக்கியதாக முகிலன் மீது தொடரப்பட்ட மற்றொரு வழக்கின் விசாரணையை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 2 நீதிபதி வருகிற 17-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து முகிலனை வேனில் அழைத்து சென்று மீண்டும் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

முன்னதாக நிருபர்களிடம் முகிலன் கூறுகையில், காவிரியில் நடக்கிற மணல் கொள்ளையை தடுக்காமல், மேகதாதுவில் அணை கட்டக் கூடிய திட்டத்தை எதிர்க்காமல் காவிரியை பாதுகாக்க மரம் நடுவோம் என கூறி கொண்டு ஒரு இயக்கம் விழிப்புணர்வு மேற்கொள்கிறது. இது மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரியும், எண்ணெயும் எடுக்க ஒரு நிறுவனம் முயற்சிக்கிறது. அதனை தடுக்க வேண்டும். சேலம் சமூக ஆர்வலர் பியூஸ் மானூஸ் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்றார். 

மேலும் செய்திகள்