டி.கே.சிவக்குமார் கைது, அரசியல் உள்நோக்கம் கொண்டது - தேவேகவுடா பேட்டி

டி.கே.சிவக்குமார் கைது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், அமலாக்கத்துறையின் தோரணையை கண்டிக்கிறேன் என்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார்.

Update: 2019-09-04 23:15 GMT
பெங்களூரு, 

முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டது குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்ட விதம் எனக்கு வருத்தம் அளிக்கிறது. அமலாக்கத்துறையினர் அனுப்பிய சம்மனுக்கு மதிப்பளித்து, டெல்லி சென்று நேரில் ஆஜரானார். தினமும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித் துள்ளார்.

ஆனால் சரியான முறையில் பதிலளிக்கவில்லை என்று கூறி அவரை கைது செய்திருப்பது சரியல்ல. அமலாக்கத்துறையினர் திருப்தி அடையும் வகையில் பதில் அளிக்க வேண்டுமா?. அவர்கள் எதிர்பார்த்தப்படி டி.கே.சிவக்குமார் பதிலளிக்கவில்லை என்று தோன்றுகிறது. கைது செய்து விசாரித்தால், மனரீதியாக நெருக்கடி கொடுத்து பதிலை பெற முடியும் என்று அதிகாரிகள் நினைத்திருக்கக்கூடும்.

அமலாக்கத்துறையின் இத்தகையை தோரணையை கண்டிக்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தபோதும் கூட விநாயகர் சதுர்த்தி அன்று தனது தந்தைக்கு மரியாதை செலுத்த டி.கே.சிவக்குமாருக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. பூஜை செய்ய அவருக்கு அதிகாரிகள் அனுமதி கொடுத்திருக்க வேண்டும். அமலாக்கத்துறையினர் மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள்.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அரசு இருந்தபோதும் கூட பல முறை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். எவ்வளவு கஷ்டங்கள் வந்தபோதும் கூட அவர் கூட்டணி அரசுக்கு ஆதரவாக இருந்தார். பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை குறித்து டி.கே.சிவக்குமார் கடுமையாக குறை கூறினார். இதனால் பா.ஜனதா தேசிய தலைவர்கள் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கி இருப்பது போல் தெரிகிறது. டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டிருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது.

விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கோர்ட்டில் அவருக்கு நியாயம் கிடைக்கும். இந்த வழக்கில் இருந்து டி.கே.சிவக்குமார் வெளியே வருவார்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார். 

மேலும் செய்திகள்