ஆழ்துளை கிணறு மூலம் நீர்ப்பாசனம் அமைக்க சிறு,குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கடன் - கலெக்டர் தகவல்

ஆழ்துளை கிணறு மூலம் நீர்ப்பாசனம் அமைக்க சிறு,குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறினார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

Update: 2019-09-04 22:30 GMT
தேனி,

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த சிறு,குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசனக் கடன் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்வதற்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வங்கிக்கடன் பெற்றுக் கொடுக்கப்படுவதோடு, இதில் 50 சதவீத அரசு மானியமாக அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த சிறு,குறு விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் சிறு,குறு விவசாயி என்பதற்கான சான்றை தாசில்தாரிடம் பெற்று, நில உடைமைக்கு ஆதாரமாக கணினி வழிப்பட்டா மற்றும் அடங்கல் நகல், சாதிச்சான்று, வருமானச்சான்று மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்