வடகர்நாடகத்தில் வெள்ளம்: நிவாரண நிதிக்கான காசோலை, பணம் இல்லாமல் திரும்பியது

வடகர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிக்கான காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் மக்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.;

Update: 2019-09-03 23:57 GMT
பெங்களூரு, 

வட கர்நாடகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் பலத்த மழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 90 பேர் மழைக்கு மரணம் அடைந்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. அதன்படி நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. விஜயாப்புரா மாவட்டம் முத்தேபீகால் தாலுகாவில் உள்ள தேவூர் கிராமத்தை சேர்ந்த 37 குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.

அந்த காசோலையை பாதிக்கப்பட்ட மக்கள் வங்கியில் செலுத்தினர். ஆனால் காசோலை வழங்கப்பட்ட வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி அதிகாரிகள் அவற்றை திருப்பி செலுத்தினர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். அந்த மக்கள் அதே பகுதியில் கூடி போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து விஜயாப்புரா மாவட்ட கலெக்டர் கூறுகையில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்படுகிறது. ஆனால் ஒரே குடும்பத்தில் 2, 3 பேர் காசோலை பெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் அந்த காசோலைகள் வாபஸ் அனுப்பப்பட்டிருக்கும். வங்கி கணக்கில் பணம் இருக்கிறது. நிவாரண நிதி வழங்க நிதி பற்றாக்குறை இல்லை“ என்றார்.

அதே போல் பெலகாவி மாவட்டம் கோகாக் தாலுகாவில் உள்ள தளகடநாளா பகுதியில், நிவாரணத்தொகை கிடைக்கவில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் டயரை சாலையில் போட்டு தீயிட்டு கொளுத்தினர். மேலும் அவர்கள் அங்குள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்