சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: ரங்கசாமியின் கடிதம் முறையாக இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டது - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கொடுத்த கடிதம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்று சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இந்த பிரச்சினையின்போது எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தன.

Update: 2019-09-04 00:00 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் பட்ஜெட் உரை மீது எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில் அளித்து பேசினார்.

அப்போது அ.தி.மு.க. சட்ட மன்ற கட்சி தலைவர் அன்பழகன் எழுந்து, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்துள்ளார். அதை எப்போது எடுக்கப்போகிறீர்கள். அதன் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த சபாநாயகர் சிவக்கொழுந்து, கடிதம் முழுமையாக இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என்றார். தொடர்ந்து பேசிய அன்பழகன் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜெ.ஜெயபால், சாமிநாதன் கொடுத்த கடிதங்கள் மீதான நடவடிக்கை எடுப்போது? அதை எப்போது எடுக்கப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த சபாநாயகர் சிவக்கொழுந்து, அதற்கு இன்னும் காலம் உள்ளது என்றார். இருந்தாலும் விடாமல் பேசிய அன்பழகன் எம்.எல்.ஏ., சட்டசபை இன்னும் 4 நாட்கள்தான் நடக்கப்போகிறது. அதற்குள் எப்போது எடுக்கப்போகிறீர்கள் என்றார்.

அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி எழுந்து, சட்டமன்ற விதிகளை பாருங்கள். அதன்படிதான் சபை நடக்கும் என்றார்.

தொடர்ந்து அன்பழகன் எம்.எல்.ஏ. பேச அவருக்கு ஆதரவாக என்.ஆர்.காங்கிரஸ், பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். ஒருகட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியேறினார். அவரை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களும் சபையைவிட்டு வெளியேறினர்.

மேலும் செய்திகள்