மும்பையில் வாகனங்களுக்கான சி.என்.ஜி. கியாஸ் வினியோகம் கடும் பாதிப்பு
மும்பை நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதியில் ஆட்டோ, டாக்சி, மாநகராட்சி பஸ்கள் உள்பட சுமார் 7 லட்சம் வாகனங்கள் சி.என்.ஜி. எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.
மும்பை,
மகாநகர் கியாஸ் நிறுவனம் மூலம் சி.என்.ஜி. கியாஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல 12 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மகாநகர் கியாஸ் நிறுவனத்துக்கு உரணில் உள்ள ஓ.என்.ஜி.சி. ஆலையில் இருந்து தான் இந்த சி.என்.ஜி. மற்றும் பி.என்.ஜி. கியாஸ் குழாய்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. உரண் ஓ.என்.ஜி.சி. ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காரணமாக மும்பையில் வாகனங்களுக்கு வினியோகம் செய்யப்படும் சி.என்.ஜி. கியாஸ் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நகரில் ஆட்டோ, டாக்சி மற்றும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து மகாநகர் கியாஸ் நிறுவன செய்தி தொடர்பு அதிகாரி கூறியதாவது:-
வீடுகளுக்கு பி.என்.ஜி. கியாஸ் எந்த பிரச்சினையும் இன்றி வினியோகம் செய்வதை நாங்கள் உறுதி செய்து இருக்கிறோம். ஆனால் குறைந்த அழுத்தம் காரணமாக சி.என்.ஜி. கியாஸ் நிலையங்களில் வாகனங்களுக்கு கியாஸ் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படலாம். அதே நேரத்தில் உடனடியாக ஓ.என்.ஜி.சி.யில் நிலைமை சரி செய்யப்பட்டால் சி.என்.ஜி. வினியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது, என்றார்.