சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை - நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி எம்.கே.டி. தெருவை சேர்ந்தவர் ஞானதுரை (வயது 53), ஆட்டோ டிரைவர். இவருடைய சொந்த ஊர் நாசரேத். இவர் சேரன்மாதேவியில் ஆட்டோ ஓட்டி வந்தார்.
இவர் கடந்த 27-1-2013 அன்று அசோக்நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டி சென்று கொண்டு இருந்தபோது, அங்கு நின்று கொண்டு இருந்த 16 வயது உடைய சிறுமி ஒருவரை தனது ஆட்டோவில் கடத்தி சென்று வெள்ளநீர் கால்வாய் அருகே வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து அந்த சிறுமியின் பாட்டி சேரன்மாதேவி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஞானதுரையை கைது செய்தனர். பின்னர் அவர் மீது நெல்லை மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, குற்றம் சாட்டப்பட்ட ஞானதுரைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.