அ.தி.மு.க.வை சேர்ந்தவருக்கு அரிவாள் வெட்டு: கூட்டுறவு வங்கி தலைவர் உள்பட 3 பேர் கைது

அ.தி.மு.க.வை சேர்ந்த வரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கூட்டுறவு வங்கி தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-03 21:45 GMT
வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் குலாலர் தெருவை சேர்ந்தவர் சோமுத்தேவர். இவருடைய மகன் காளிதாசன் (வயது38). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் முன்னாள் கூட்டுறவு வங்கி இயக்குனர்.சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்து சின்னதேவன்காடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த காளிதாசனை தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாார். இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின் பேரிலும், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா அறிவுறுத்தலின்படியும் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் காளிதாசை அரிவாளால் வெட்டிய வழக்கில் தாணிக்கோட்டகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் முருகானந்தம்(59), தாணிக்கோட்டகம் பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் சத்தியராஜ்(28), கமலநாதன்(42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் முன்விரோதம் காரணமாக காளிதாசன் அரிவாளால் வெட்டப்பட்டது தெரிய வந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றும் சிலரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்