செய்தி சிதறல், டிராக்டரை பறிமுதல் செய்த வங்கி ஊழியர்கள் - மனமுடைந்த விவசாயி தற்கொலை முயற்சி

டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டதால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-09-03 22:30 GMT
கீழப்பழுவூர்,

*அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ வண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன்(வயது 52). விவசாயி. இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு வங்கி மூலம் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். ஆனால் கடந்த ஓராண்டாகவே விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடனை திருப்பி செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என வங்கியிலிருந்து அறிவிப்பு நோட்டீசும் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அருங்கால் கல்லக்குடி கிராமத்தில் மற்றொருவர் நிலத்தில் தேவேந்திரன் டிராக்டர் மூலம் வாடகைக்கு உழவு ஓட்டி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வங்கி ஊழியர்கள் கடனை கட்டாததால் டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதில் மனமுடைந்த தேவேந்திரன் அங்கு வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அப்போது அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாலிபரை தாக்கியவர் கைது

*ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பில் உள்ள பிள்ளையார் தெருவை சேர்ந்தவர் பாண்டியன்(32). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(35) என்பவருக்கும் இடையே இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று பாண்டியன் தனது வீட்டின் முன்பு உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திகேயன், அவரது உறவினர் ராஜூ ஆகிய இருவரும் சேர்ந்து பாண்டியனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலைமறைவான ராஜூவை தேடி வருகிறார்.

2 பேர் மீது வழக்கு

*தா.பழூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் தா.பழூர் சுற்றுவட்டாரப் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடை, மளிகை கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சோழமாதேவி கிராமம், அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்த கந்தவேல்(45) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம்(64) என்பவரும் தங்களது மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மது விற்றவர் கைது

*இதேபோல் தேவமங்கலம் பகுதியில் தா.பழூர் போலீசார் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் மதுவிற்ற தேவமங்கலம் ரோட்டு தெருவை சேர்ந்த ராமசாமி(35) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

நோட்டீஸ் ஒட்டியவர் மீது வழக்கு

*அரியலூர் மாவட்டம், கோப்பிலியன் குடிக்காடு கிராமத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையின் சுவற்றில் தமிழ் தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் தமிழரசனுக்கு 31-ம் ஆண்டு செவ்வணக்கம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. அவ்வழியாக ரோந்து பணிக்கு சென்ற கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா அரசு அலுவலக சுவற்றில் அனுமதியின்றி நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அப்போது கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் உள்ள சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த பஞ்சநாதன் மகன் ரவிச்சந்திரன் என்பவர் இந்த நோட்டீசை ஒட்டியது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபரின் கைவிரல்கள் துண்டானது

*பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி வாணவேடிக்கை நடத்தும் நிகழ்ச்சிக்காக வாலிபர்கள் சிலர், மேட்டாங்காடு கிராமத்தை சேர்ந்த நாட்டு வெடி வைக்கும் ரவியிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவரிடம் கூலி வேலை செய்பவரான மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா மகன் ரஞ்சித் (19), எளம்பலூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு நாட்டு வெடி வெடித்தார். அதில் ஒரு நாட்டு வெடி வெடிக்கவில்லை. அதனை ரஞ்சித் தனது கையில் எடுத்தபோது அந்த வெடி வெடித்தது. இதில் ரஞ்சித்தின் 4 விரல்கள் சிதறி துண்டானது. பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஞ்சித் , பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து எளம்பலூர் கிராம நிர்வாக அதிகாரி சேகர் பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார், விநாயகர் சிலை வைக்க ஏற்பாடு செய்த கணேசன்(47) வெடி வெடித்த ரஞ்சித், வெடி வெடிக்க ஏற்பாடு செய்த ரவி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்