தலைமை ஆசிரியையை கண்டித்து, பள்ளியை இழுத்து பூட்டி மாணவிகளுடன் பெற்றோர் தர்ணா
தலைமை ஆசிரியையை கண்டித்து பள்ளியை இழுத்து பூட்டி மாணவிகளுடன் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிதம்பரம்,
சிதம்பரம் சந்தகாரதெருவில் நகராட்சி பெண்கள் உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியையாக எழிலரசி(வயது53) என்பவர் உள்ளார். இவர் மாணவிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி வருவதாகவும், கழிவறையை சுத்தம் செய்ய வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த பள்ளி மாணவிகளின் பெற்றோர் முன்னாள் கவுன்சிலர் திருவரசு தலைமையில் நேற்று காலை 9 மணிக்கு தங்களது பிள்ளைகளுடன் பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டனர். மேலும் பள்ளியின் முன்பக்க கேட்டையும் அவர்கள் இழுத்து பூட்டினர். இதற்கிடையே ஏற்கனவே பள்ளிக்கு வந்திருந்த ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் சிலர் பள்ளியின் உள்ளே இருந்தனர். இதுபற்றி அவர்கள் உடனடியாக சிதம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் நகராட்சி மின் கண்காணிப்பாளர் சலீம், நகராட்சி வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது பள்ளியின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தங்கள் குழந்தைகளை ஆபாசமாக திட்டி வரும் தலைமை ஆசிரியை எழிலரசியை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய வேண்டும், பள்ளியில் அடிப்படை வசதிகளான கழிவறை மற்றும் தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து சிறிது நேரத்திற்கு பின் வழக்கம் போல் பள்ளி இயங்கியது. சுமார் 30 நிமிடம் நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.