தேனி மாவட்டத்தில், 9 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது
தேனி மாவட்டத்தில் 9 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேனி,
கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் நல்லாசிரியர் விருது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தின விழாவில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநில நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
தேனி மாவட்டத்தில் 9 பேர் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி, அனுப்பப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மணி, ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மதலைமுத்து, கம்பம் உத்தமபுரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை ரேவதி, ஸ்ரீரெங்காபுரம் எஸ்.ஆர்.ஜி. அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி ஆகியோர் நல்லாசிரியர் விருது பெறுகின்றனர்.
அதேபோல், ஓடைப்பட்டி காமுகுல ஒக்கலிக்கர் (காப்பு) கவுடர் உறவின்முறை ஸ்ரீநந்தகோபால் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை நாவரசி, திம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராமகிருஷ்ணன், காக்கிவாடன்பட்டி விஜயராஜ், வடுகபட்டி சேடப்பட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப்பள்ளி கைத்தொழில் ஆசிரியர் உமாபதி, முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் முருகன் ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு பெற உள்ளனர்.
இவர்களுக்கு நாளை (வியாழக்கிழமை) சென்னையில் நடக்க உள்ள ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.