கழிவுநீர் அகற்றப்படாததை கண்டித்து மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

மணலியில் கழிவுநீர் அகற்றப்படாததை கண்டித்து மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2019-09-03 22:00 GMT
திருவொற்றியூர்,

மணலியில் உள்ள புதிய எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வரும் குடியிருப்புவாசிகள் சாலையில் தேங்கியிருக்கும் கழிவுநீரால் அவதிப்படுவதாகவும், அதை அகற்ற கோரியும் பலமுறை மாநகராட்சி மணலி மண்டல அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்காததால், இதுவரை கழிவுநீர் அகற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவுவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஒன்று கூடி மணலி மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கழிவுநீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலைகளில் தேங்கிய கழிவுநீரை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்