மழையால் சேதம் அடைந்த தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும்: கலெக்டருக்கு கோரிக்கை

மழையால் சேதம் அடைந்த தஞ்சை- கும்பகோணம் நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என கலெக்டருக்கு, நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2019-09-02 21:30 GMT
பாபநாசம்,

தஞ்சை மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மற்றும் ஊழல் தடுப்பு செயலணி தலைவர் குழந்தைவேலு மற்றும் நிர்வாகிகள் சாலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தின்போது தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் ஏராளமான பள்ளங்கள் தோன்றி உள்ளன. இதனால் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே பழுதான சாலையை சீரமைத்து அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளை சாலையின் இரு ஓரங்களிலும் பொருத்த நட வடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் கும்பகோணம்-திருவையாறு சாலையில் கபிஸ்தலத்தில் இருந்து கணபதி அக்ரஹாரம் வரை சாலையோரத்தில் மின் விளக்குகள் ஒளிர்வதில்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் சரிவர எரிவதில்லை. சாலை விளக்குகள் இல்லாமல் இருண்டு கிடப்பதால் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. எனவே அந்த பகுதியில் உள்ள மின் விளக்குகளை உடனடியாக பழுதுநீக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் உள்ள வேகத்தடைகளின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்