கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் பொன்விழா கொண்டாட்டம்
கன்னியாகுமரி கடலின் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் 50-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முதலாவதாக வந்த சுற்றுலா பயணிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் விவேகானந்தருக்கு 1970-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி நினைவு மண்டபம் கட்டப்பட்டது. அன்று முதல் இந்த மண்டபத்தை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
இந்த மண்டபம் நிறுவி 49 ஆண்டுகள் நிறைவடைந்து நேற்று 50-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதையொட்டி நேற்று பொன் விழா ஆண்டாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுவதற்காக முதன் முதலாக வந்த மும்பை பல்கலைக்கழக பேராசிரியர் நவநீத்தா மெக்னானி என்பவருக்கு விவேகானந்த கேந்திர நிறுவனம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர செயலாளர் அனுமந்தராவ் தலைமையில், விவேகானந்தர் பாறை நினைவாலய மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ், பாறை நினைவாலய பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் மும்பை பேராசிரியரை வாழ்த்தி வரவேற்று நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். இவர் விவேகானந்த மண்டபத்துக்கு வந்த 6 கோடியே 52 லட்சத்து 74 ஆயிரத்து 384-வது நபர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, விவேகானந்தா கேந்திர துணைத்தலைவர்கள் பாலகிருஷ்ணன், நிவேதிதா, துணை பொதுச்செயலாளர் பிரவீன் தபோல்கர், கிஷோர், ரேகாதவே ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, விவேகானந்தர் மண்டப பொன்விழாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்ததாக விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் தெரிவித்தனர்.