திருப்பத்தூர் அருகே, எலக்ட்ரானிக்ஸ் கடைக்காரர் வீட்டில் நகை - பணம் கொள்ளை

திருப்பத்தூர் அருகே எலக்ட்ரானிக்ஸ் கடைக்காரர் வீட்டில் நகை , பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-09-02 22:15 GMT
திருப்பத்தூர், 

திருப்பத்தூர் அருகே உள்ள ஆதியூரை சேர்ந்தவர் சம்பத் (வயது 64). இவர், திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றனர். சம்பத் வீட்டை பூட்டிவிட்டு, கடைக்கு சென்றார்.

பின்னர் சம்பத் வீட்டிற்கு வந்த போது, முகமூடி அணிந்திருந்த 2 மர்ம நபர்கள் வீட்டின் சுவரில் இருந்து வெளியே நிலத்தில் குதித்து ஓடுவதை பார்த்து திருடன் திருடன் என கூறி கொண்டு, அவர்களை பின்தொடர்ந்து ஓடினார். ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 10 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் 1½ கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சம்பத் திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக திருப்பத்தூர் பகுதியில் நடைபெறும் தொடர் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்