ஜனவரி 21-ந் தேதி முதல் கள் இறக்கும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் - நாமக்கல்லில் நல்லசாமி பேட்டி
அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் கள் இறக்கும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என நாமக்கல்லில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார். தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல்,
இன்று (நேற்று) உலக தென்னை தினம் ஆகும். 108 நாடுகளில் தென்னை, பனை மரங்கள் உள்ளன. ஆனால் எங்கும் கள்ளுக்கு தடை இல்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் சட்டத்திற்கு புறம்பாக தடை நீடித்து வருகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். இல்லை எனில் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை 48 சதவீதம் குறைந்து உள்ளது. எனவே குடிநீர் பிரச்சினையை போக்க மேட்டூர் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதன்மூலம் நாமக்கல், சேலம் உள்பட 7 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். மழையை நம்பி உள்ள பனை மரங்கள் பல பட்டுபோய் விட்டன. இதற்கு முக்கிய காரணம் ஆழ்துளை கிணறுகள் தான். எனவே ஆழ்துளை கிணறுகளை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
சட்ட திருத்தங்கள் கொண்டுவந்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் கள் இயக்கம் போட்டியிடும்.
நீலகிரியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் லிட்டர் ரூ.5-க்கு அரசால் வழங்கப்படுகிறது. விலையில்லா அரிசி கொடுக்கும் இந்த அரசால் ஏன் பாதுகாக்கப்பட்ட குடிநீரை இலவசமாக கொடுக்க முடியவில்லை. பால்விலை உயர்வு போதுமானதாக இல்லை. இந்த விலை உயர்வை எதிர்ப்பது கண்டனத்துக்கு உரியது.
தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ள தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கள் இயக்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.