வாக்காளர் பட்டியலை பொதுசேவை மையத்தில் சரிபார்க்க புரிந்துணர்வு திட்டம் - கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் பட்டியலை பொதுசேவை மையத்தில் சரிபார்த்துக்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.;

Update:2019-09-03 03:45 IST
புதுச்சேரி,

புதுவை மாநிலத்தின் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்கும் செயல் திட்டத்தை தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி வரை செயல்படுத்த ஆணையிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலிலுள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, புகைப்பட மாற்றம் போன்ற விவரங்களை https://www.nvsp.in என்ற இணையதளம், வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி, வாக்காளர் உதவி மையம், பொது சேவை மையங்கள் ஆகியவைகள் மூலம் வாக்காளர்கள் சரி பார்த்து கொள்ளலாம்.

பிழை திருத்தம் செய்ய விரும்புவர்களும் முகவரி மற்றும் புகைப்பட மாற்றம் செய்ய விரும்புபவர்கள் பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கி, அஞ்சலக கணக்கு புத்தகம், அரசு வழங்கியுள்ள அடையாள அட்டை, மின் மற்றும் தண்ணீர் கட்டண பில், உழவர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வு ஊதிய ஆவணம் உள்ளிட்டவைகளை கொண்டு திருத்தம் செய்து கொள்ளலாம்.

பொது சேவை மையத்தில் சரிபார்ப்பதற்கு குறைந்த கட்டணத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர்கள் பதிவு செய்த விவரங்களை வாக்குச்சாவடி அதிகாரிகள் கள ஆய்வு செய்து சரிபார்த்த பின்னர் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதன் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 15-ந் தேதி வெளியிடப்படும்.

வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை முழுமையாக அமல்படுத்தி 100 சதவீத பிழையற்ற வாக்காளர் பட்டியலை ஏற்படுத்தும்போது அனைத்து அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அவர் தம் குடும்பத்தினர் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 100 சதவீதம் பிழையில்லா வாக்காளர் பட்டியலை தயாரிக்க தேர்தல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்