ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்து துரத்தும் ஒற்றை யானை; வனப்பகுதிக்குள் விரட்ட வாகன ஓட்டிகள் கோரிக்கை

ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்து துரத்தும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2019-09-02 22:00 GMT
தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் ஆகிய வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இந்த அடர்ந்த வனப்பகுதி வழியாகத்தான் திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. எனவே இந்த சாலையில் எப்போது வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். மேலும் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி அங்குள்ள சாலையை கடப்பது வழக்கம்

இந்த நிலையில் ஒற்றை ஆண் யானை கடந்த ஒரு மாதமாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுற்றித்திரிகிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் வாகனங்களை அந்த யானை வழிமறித்து துரத்துகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே யானை ஒன்று சுற்றித்திரிகிறது. இந்த யானை அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிமறிப்பதுடன், துரத்தி செல்கிறது. மேலும் அந்த யானை வனப்பகுதிக்குள் செல்லும் வரை காத்திருந்து வாகனங்களை இயக்க வேண்டி உள்ளது. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

எனவே வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

மேலும் செய்திகள்