மகள்களுக்கு திருமணம் முடிக்க முடியாததால் தச்சுத்தொழிலாளி தற்கொலை - தேனியில் பரிதாபம்
தேனியில் மகள்களுக்கு திருமணம் முடிக்க முடியாததால் தச்சுத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தேனி,
தேனி வெங்கலாகோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 55). தச்சுத் தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா (44). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். சேகர் தனது மகள்களை படிக்க வைக்க பலரிடம் கடன் வாங்கி உள்ளார். அந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.
இந்நிலையில், சேகர் தனது மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. குடும்பம் இவ்வளவு வறுமையில் இருக்கும் போது மகள்களுக்கு எப்படி திரு மணம் செய்து வைப்பது? என கவலைப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அல்லிநகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி பிரியா கொடுத்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாததால் மனமுடைந்த தச்சுத்தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.