தியாகதுருகத்தில், லாரி மீது ஆம்னி பஸ் மோதல்; டிரைவர் பலி - 21 பேர் படுகாயம்
தியாகதுருகத்தில் லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் மாற்று டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
கண்டாச்சிமங்கலம்,
நாமக்கல்லை சேர்ந்தவர் ராஜீவ் (வயது 39). டிரைவர். இவர் கொல்கத்தா மாநிலத்தில் இருந்து சணல் நார்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி புறப்பட்டார். அந்த லாரியில் மாற்று டிரைவராக திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நாகநல்லூர் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் (45) என்பவர் இருந்தார்.
இந்த லாரி தியாகதுருகம் புறவழிச்சாலையில் உள்ள மலை அருகே வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் எதிரே கோவையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கண்இமைக் கும் நேரத்தில் லாரி மீது ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் லாரியும், ஆம்னி பஸ்சும் பலத்த சேதமடைந்தது.
விபத்தில் லாரியின் இடிபாடுகளில் சிக்கி மாற்று டிரைவர் தர்மலிங்கம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். ராஜீவ் படுகாயம் அடைந்தார். மேலும் ஆம்னி பஸ்சில் வந்த சென்னை மகாபலிபுரத்தை சேர்ந்த ராஜபாபா மகன் கண்ணன் (28), பட்டுக்கோட்டை நெய்வவிருது பகுதியை சேர்ந்த பிரபாகரன் (28), சென்னை அசோக்பில்லர் பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி உமாராணி (31), இவரது மகன்கள் வருண் (4), தருண் (11) உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே விபத்து குறித்த தகவலின் பேரில் தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த தர்மலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சேதமடைந்த லாரி மற்றும் ஆம்னி பஸ்சை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் சாலையில் இருந்து அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர். இருப்பினும் இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.